வந்தவாசி அருகே இரும்பேடு கிராமத்தில் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பாதிப்பு

வந்தவாசி அருகே இரும்பேடு கிராமத்தில் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தக் கிராமத்தில் வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

வந்தவாசியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் கடந்த சில நாள்களாக சுமார் 20-க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதில், சிலர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, வந்தவாசி வட்டார மருத்துவக் குழுவினர் அந்தக் கிராமத்தில் முகாமிட்டு கிராம மக்களை பரிசோதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், ஊரக வளர்ச்சித் துறையினரும் அந்தக் கிராமத்தில் முகாமிட்டு சுகாதாரப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார், இரும்பேடு கிராமத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அந்தக் கிராமத்தில் உள்ள ஒளவையார் குளம், கால்வாய்கள் உள்ளிட்டவற்றை அவர் ஆய்வு செய்தார்.

அப்போது, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களிடம் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து எம்எல்ஏ கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, இரும்பேடு கிராமத்தில் தீவிர சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளும்படியும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும்படியும் அதிகாரிகள், மருத்துவக் குழுவினரை எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் வலியுறுத்தினார்.
மேலும், அந்தக் கிராம மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக ஒளவையார் குளத்தில் ரூ.10 லட்சம் செலவில் திறந்தவெளி கிணறு, குழாய் அமைக்கப்படும் என்று பொதுமக்களிடம் எம்எல்ஏ உறுதி அளித்தார்.
வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வி, வட்டார மருத்துவ அலுவலர் திருமூர்த்தி, திமுக ஒன்றியச் செயலர்கள் டி.டி.ராதா, எஸ்.சுரேஷ்கமல், நந்தகோபால், நகரச் செயலர் பாபு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *