எஸ்.சி., எஸ்.டி. இளைஞர்கள் தொழில் தொடங்க டிச.21, 22-இல் கலந்தாய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கான கலந்தாய்வு வரும் 21, 22-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்) செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கான கலந்தாய்வு வரும் 21, 22-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புவோர் பட்டம், பட்டயம், ஐடிஐ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது வரம்பு 21 முதல் 45-க்குள் இருக்க வேண்டும். உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்கள் செய்வதற்கான திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சம் முதல் ரூ. ஒரு கோடி வரை இருக்கலாம்.
திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சம் ரூ.25 லட்சம்) மானியமாக வழங்கப்படும். எனவே, தொழில் தொடங்கும் ஆர்வம், தகுதியுள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்த படித்த, வேலையில்லாத இளைஞர்கள் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் (வணிக வரி அலுவலகம் அருகில்), திருவண்ணாமலை என்ற அலுவலகத்தில் வரும் 21, 22-ஆம் தேதிகளில் காலை 11 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும், விவரங்களுக்கு 9486494621, 9840566320 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *